கன்னியாகுமரி:சமீப காலங்களாக உலகில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று புற்றுநோய். உலக அளவில் ஒப்பிடும் போது 180 லட்சம் முதல் 190 லட்சம் பெயர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவை எடுத்துக் கொண்டால் 19 லட்சம் பேருக்கு புற்றுநோய் உள்ளது என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2000ஆவது ஆண்டு உலக சுகாதார துறையின் கணக்கெடுப்பின்படி உலகில் 10 மில்லியன் பேருக்கு இந்த பாதிப்பு இருந்தது.
2020ஆம் ஆண்டு 15 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது காரணம் 15 மில்லியனுக்கு பதிலாக 18 மில்லியன் பேருக்கு புற்றுநோய் தாக்கி பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் இந்தியாவில் வேகமாக பரவி வரும் இந்த புற்றுநோய்க்கான அடிப்படை காரணம் என்ன? அவற்றை எப்படி கண்டுபிடிப்பது? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்? எந்த உணவுகளை உண்ண வேண்டும்? என்பது குறித்து புற்றுநோய் சிறப்பு மருத்துவரான சுதாகர் கூறியுள்ளார்.
நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற பிரபல புற்றுநோய் மருத்துவரான டாக்டர் சுதாகர் கூறியதாவது, “நாம் காலை எழுந்தவுடன் செல்போனை எடுத்துக் கொண்டு குட் மார்னிங் எனவும் குட்நைட் எனவும் மெசேஜ் அனுப்புகிறோம். ஆனால் அந்த குட் மார்னிங், குட் நைட் என்பது நமக்கு நன்மை தந்து உள்ளதா என சிந்திக்க வேண்டும். காரணம் நாம் காலையில் எழுந்து பல் துலக்க உபயோகப்படுத்தும் பொருட்களில் இருந்து இரவு தூங்கும் வரை நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் ரசாயனம் கலந்த பொருட்களாக பயன்படுத்தி வருகிறோம்.
கேன்சரை பொருத்தவரை அது தொற்று நோய் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. இது தவறானது இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. புற்றுநோய் வந்தால் எல்லாம் முடிந்தது அல்லது கடவுளின் தண்டனை என்று நினைத்து சோர்ந்து கவலைப்படுபவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் உண்மையில் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அதனை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம். தமிழகத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 89 பேருக்கு புற்றுநோய் உள்ளது.
இது எதனால் வருகிறது என பார்த்தால் பூமிக்கு கீழே ஒவ்வொரு இடத்திலும் ரேடியேஷன் எனப்படும் கதிர் வீச்சுக்கள் இருக்கும். இதில் சில கதிர்வீச்சுகள் அயோனிசிங் ரேடியேஷன் (Ionizing radiation) என்றும், நான் அயோனிசிங் ரேடியேஷன் (Non Ionizing radiation) என்றும் இரண்டு வகையாக உள்ளது. இதில் நான் அயோனிசிங் ரேடியேசன் என்பது ரேடியோ, டிவி, மொபைல் போன்கள் போன்றவற்றின் மூலமாக நேரடியாக புற்றுநோய் உண்டு பண்ணாவிட்டாலும் மறைமுகமான பாதிப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உருவாகும்.
அயோனிசிங் ரேடியேஷன் என்பது தாது பொருட்கள் கனிமங்களில் இருந்தும் பரவக்கூடிய கதிர் வீச்சு மூலம் இந்த நோய் உருவாக வாய்ப்பு உள்ளது. மொபைல் ஃபோன்களை பொறுத்தவரை ஒரு அளவிற்கு அதிகமாக அதனை உபயோகிப்பவர்கள் கடும் பாதிப்புகளை சந்திப்பார்கள். குறிப்பாக இரண்டு நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து செல்போன்களை உபயோகிப்பவர்களின் மூளை வெப்பத்தை இரண்டு டிகிரி சூடாகி ஹெச்.எஸ்.பி எனப்படும் ஹீட் ஷாக் புரோட்டின் மூலம் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.