குமரி:குமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளச்சிவிளையில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 20 பேர் நேற்று (டிசம்பர் 31) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர்.
அவர்கள் அளித்துள்ள புகாரில், "நாங்கள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் விடுதியில் தங்கி நர்சிங் பயின்று வருகிறோம்.
இந்தக் கல்லூரியின் தாளாளர் செல்வக்குமாரும், கல்லூரி முதல்வர் செல்வராணியும் கல்லூரி மத்திய, மாநில அரசுகளின் சான்றிதழ் பெற்ற கல்லூரி எனக்கூறி எங்களை ஏமாற்றி இங்கு சேர்த்துள்ளனர். இங்கு போதுமான அடிப்படை வசதி ஏதும் இல்லை. மிகச் சிறிய அறையில் 100 பேருக்கு மேல் தங்கவைக்கப்பட்டுள்ளோம். தேவையான உணவு தருவதில்லை. கழிவறை வசதி முறையாக இல்லை. கல்லூரியின் தாளாளர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவருகிறார்.
இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுகிறார். கல்லூரியில் தகுதியான ஆசிரியர்கள் யாரும் கிடையாது. ஆண்டுக்கு 20 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் ரூபாய், உணவகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் என 80ஆயிரம் ரூபாயை முதலாம் ஆண்டிலே பெற்றுக்கொண்டு பாடம் நடத்தாமாலும், உணவும் தராமல் எங்களைத் துன்புறுத்துகின்றனர்.
மேலும், வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு எங்களை மிரட்டுகின்றனர். இக்கல்லூரி குறித்து விசாரித்தபோது, அரசு அனுமதியில்லாமல் கல்லூரி இயங்கிவருவது தெரிகிறது. எனவே, சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்லூரியின் மீதும், முறையாக உணவு வழங்காத கல்லூரி முதல்வர் மீதும், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாளாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்த மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:மாணவிகள் மழையில் நனையும் போது எனக்கு மட்டும் குடை எதற்கு ? - பாதுகாவலரை கடிந்த அமைச்சர்