சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அனைத்து மாநிலத்தவர்களும் பயன்பெறும்வகையில் பல்வேறு உணவகங்கள் செயல்பட்டுவந்தன. இந்த உணவகங்களில் குறிப்பாக ராஜஸ்தான், மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பணியாற்றிவந்தனர்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்து உணவகங்களும், உணவு விடுதிகளும், நட்சத்திர விடுதிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். இந்நிலையில், வெளிநாடு, வெளி மாநிலங்களில் உள்ளவர்களை சொந்த ஊருக்கு திருப்பியனுப்பும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டதையடுத்து, குமரி மாவட்ட ஆட்சியரிடம் ராஜஸ்தானைச் சேர்ந்த 44 தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல உரிய அனுமதி பெற்று, சொந்த ஊருக்கு தனி வாகனம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.