கன்னியாகுமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே கூறுகையில்,"குமரி மாவட்டத்தில் 150 தனியார் மருத்துவமனைகள், 12 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளை கண்காணித்து வருகிறோம்.
கேரள மாநிலத்தை ஒட்டிய மேல்புறம், திருவட்டார், கிள்ளியூர் ஒன்றியங்களில் காய்ச்சல் பரவுகிறது என கண்காணித்து வருகிறோம். வெளியூர் சென்று வரும் மக்களுக்கு காய்ச்சல் வந்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும். விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது, கைகளை நன்கு கழுவி அதன் பின்னர் சாப்பிட வேண்டும்.
ஒரே இடத்தில் நான்குக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் வந்ததாகவோ, காய்ச்சல் எண்ணிக்கை உயர்ந்தாகவோ தகவல் இல்லை. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கேரள சுகாதாரத்துறையும் நிபா குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்கிறார்கள். குமரி மக்களும் இந்த நோய் குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை" என்று, தெரிவித்தார்.