தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு பழ.நெடுமாறன் கண்டனம்!

கன்னியாகுமரி: விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நாடுகள் நீக்கியுள்ள நிலையில், இந்தியாவில் காலநீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

பழ.நெடுமாறன்

By

Published : May 14, 2019, 3:52 PM IST

தமிழர் தேசிய முன்னணி தலைவர் ‌பழ.நெடுமாறன் கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நாடுகள் நீக்கியுள்ள நிலையில், இந்தியா நீட்டித்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட தடை, பாரதிய ஜனதா ஆட்சியில் பிற்பற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த தடையை நீட்டிக்க எவ்விதத் தேவையும் இல்லை. இது ஈழத்தமிழர்களுக்கு எதிரானது. அப்பட்டமான ஜனநாயக படுகொலையும் கூட.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் தனி ஈழம் வேண்டும் என்று கேட்டார்களே தவிர தமிழகத்தில் தனி தேசியம் வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கேட்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக ஐநாவின் மனித உரிமை ஆணையத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று கோரிக்கை கொண்டு வந்தபோது, அதனை இலங்கை அரசுடன் இந்தியாவும் இணைந்து நீர்த்துப் போகச் செய்தது.

ஈழத் தமிழர் பிரச்னையில் சிறிதளவுகூட இந்திய அரசு அக்கறை காட்டவில்லை. தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் ஏழு கோடி தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். தமிழர்களின் உணர்வுகளை கூட இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு முன்வரவில்லை. தமிழர்களை இந்திய அரசு குடிமக்களாகவே கருதவில்லையா என்கிற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு ஒட்டுமொத்தமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது, உலக நாடுகளில் எங்கும் கொடுக்காத தீர்ப்பு. தடா சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது தவறு என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ‌ஆளுநர் அமைச்சரவை கூடி எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. எதையும் செயல்படுத்தவில்லை. ஆனால் சிபிஐ தொடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது என்று முட்டுக்கட்டை போட்டது மத்திய அரசு. தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு 7 பேரின் விடுதலை குறித்து அறிக்கை ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், ஒன்பது மாத காலமாக அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்” என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details