முன்உதித்த நங்கை சிலை நாளை அதிகாலை சுசீந்திரம் வருகை! - சாமி சிலைகள்
கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலைய கோயிலிலிருந்து எடுத்துவரப்பட்ட முன்உதித்த நங்கை சிலை பத்மனாபபுரம் பெருமாள் கோயிலில் இன்று வைக்கப்பட்டு நாளை அதிகாலையில் சுசீந்திரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
குமரி மாவட்டம் சுசீந்திரம் கோயிலிலிருந்து பல்லக்கில் கொண்டுவரப்படும் முன் உதித்த நங்கை சிலை, குமாரகோயிலிலிருந்து பல்லக்கில் கொண்டுவரப்படும் முருகன் சிலை ஆகிய இரண்டும் பத்மனாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கெட்டு பகவதி அம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்படும்.
மேலும், அங்குள்ள சரஸ்வதி அம்மன் சிலையை யானை மீது ஏற்றி திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவுக்கு ஊர்வலமாக கொண்டுசெல்வது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு இந்த மூன்று சுவாமி சிலைகளையும் சிறு பல்லக்கில் ஏற்றி எந்தவிதமான வரவேற்பு இல்லாமல் கட்டுப்பாடுகளுடன் கொண்டுசெல்ல குமரி மாவட்ட நிர்வாகமும் கேரள அரசும் முடிவு செய்தன.
அன்படி இந்த மாதம் 14ஆம் தேதி பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட சாமி சிலைகள் நவராத்திரி திருவிழா முடிந்து நேற்று முன் தினம் திருவனந்தபுரத்திலிருந்து எடுத்துவரப்பட்டது.
இந்தச் சுவாமி சிலைகள் நேற்று குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் காலை 10 மணிக்கு வந்து அங்கு ஓய்வெடுத்த பிறகு இன்று அதிகாலை 5.30 மணிக்கு குழித்துறையிலிருந்து எடுத்துவரப்பட்டு வழக்கத்துக்கு மாறாக இன்று ஐந்து மணிநேரத்திற்கு முன்பாகவே பத்மனாபபுரம் வந்துசேர்ந்தது.
இங்கு வந்த மூன்று சுவாமி சிலைகளில் குமாரகோயில் முருக சாமி சிலையை குமாரகோயிலுக்கும் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் சிலையை தேவாரக்கெட்டு ஆலயத்திலும் கொண்டுசேர்க்கப்பட்டன.
சுசீந்திரம் தாணுமாலைய கோயிலிலிருந்து எடுத்துவரப்பட்ட முன்உதித்த நங்கை சிலை பத்மனாபபுரம் பெருமாள் கோயிலில் இன்று வைக்கப்பட்டு நாளை அதிகாலையில் சுசீந்திரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்தச் சுவாமி சிலைகள் ஊர்வலத்தில் தமிழ்நாடு-கேரள காவல் துறை அணிவகுப்புடன் கொண்டுவரப்பட்டன.