கன்னியாகுமரி:நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதே மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் அதே மருத்துவக் கல்லூரியில் உறைவிட மருத்துவராக (பொறுப்பு) பணிபுரியும் ஆசாரி பள்ளம் அனந்தன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி சுரேஷ் சிங் (வயது 52) மீது கோட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த பரபரப்பு ஒரு புறம் இருக்க, நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் இரு மாணவிகள் கோட்டாறு காவல் நிலையத்திற்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த புகார் மனுவில், அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் தங்களை பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்து உள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் கோட்டாறு போலீசார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் கல்லூரியில் அலுவலக உதவியாளர் வைரவன் என்பவர் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததை உறுதிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, வைரவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் நடந்து ஓராண்டிற்குப் பிறகு நேற்று தான் (அக் 24) இந்த மாணவிகள் ஆன்லைன் மூலமாகப் புகார் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மேலும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே போலீசார் நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் அனைத்து மாணவிகளிடமும் முழுமையான விசாரணையை மேற்கொண்டு அவர்களுக்கான கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆயுதங்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை! வீடியோ வைரல்!