தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக, அமமுக இணைவது குறித்து மு.க.ஸ்டாலின் போல ஜோதிடம் சொல்ல முடியாது' - செல்லூர் ராஜு - கூட்டுறவுத்துறை ஊழல்

கன்னியாகுமரி: அதிமுக, அமமுக இணைவது குறித்து மு.க.ஸ்டாலின் போல ஜோதிடம் சொல்ல முடியாது என்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

sellur raju
sellur raju

By

Published : Sep 10, 2020, 10:56 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை ஆய்வுக் கூட்டங்கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நெல்லையில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை தந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் கூட்டுறவுத் துறை உயர் அலுவலர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அதிமுகவில் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இளைஞர்கள் ஆர்வத்துடன் கட்சியில் இணைந்து வருகின்றனர். சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. கட்சி வலுவாக இருப்பதால் எங்களுக்கு பிரச்னை இல்லை. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு எளிதாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ

புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர் பாசறை போன்ற அமைப்புகள் மூலம் ஏராளமான இளைஞர்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர். முதலமைச்சரின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக உள்ளது. கரோனா காலத்தில் கூட அவர் சிறப்பாக நிர்வாகம் செய்துள்ளார். அதிமுக, அமமுக இணைய வாய்ப்பில்லை, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று மு.க.ஸ்டாலின் போன்று ஜோதிடம் சொல்ல முடியாது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையில் 126 நகர கூட்டுறவுச் சங்கங்களும், 181 கிளை கூட்டுறவு சங்கங்களும் உள்ள நிலையில், அண்மையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களை நேரடியாக மத்திய அரசின் கீழ் வருவதாக அறிவித்தது. ஆனால் நாம் அதற்கு முதலிலேயே நமது கருத்தை மத்திய வங்கிக்கு தெரிவித்து விட்டோம். அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் கூட்டுறவுச் சங்கங்களில் சாதாரணமானவர்கள் உறுப்பினராக முடியாது. விவசாயத் துறையை எடுத்துக்கொண்டால் அதில் பட்டம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். மேலாளராக வர வேண்டுமானால் அதற்கான கல்வித் தகுதி வேண்டும். கல்வித் தகுதி வேண்டும் என்பதால் அந்தச் சட்டத்தை கொண்டு வர முயன்றார்கள். நாம் அதற்கு முழுமையாக கண்டனத்தை தெரிவித்த நிலையில், 115 ஆண்டுகளான பழமைவாய்ந்த காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி, நாமக்கல் நகர கூட்டுறவு வங்கியும் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளனர்.

அந்த சட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என்ற கருத்தை நாம் பதிவு செய்த வேளையில், கரோனா பாதிப்பு காரணமாக நாடாளுமன்றம் கூடமுடியாத நிலையில் சட்டம் அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் தான் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை செயல்படுத்த முடியும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:'டெல்லிக்கு ராஜாதான்... ஆனா தமிழ்நாட்டில் இன்னும் வளரனும்' - அமைச்சர் செல்லூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details