கன்னியாகுமரி:பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் இன்று (நவ.4) நடைபெற்றது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கன்னியாகுமரி வந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இதில் பங்கேற்றதோடு, பயனாளிகளுக்கு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுதிகளை மேம்படுத்த இதுவரை ஆண்டிற்கு ரூ.15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை மாற்றி, ரூ.50,000 ஆக உயர்த்தினார். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள விடுதிகளை கல்லூரி மாணவர்கள் விடுதிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் கட்டப்படும் விடுதிகளில் தனியாக கற்பித்தல் அறையும், மேலும் சிறு சிறு விளையாட்டுகள் விளையாட ஏற்ற வகையில் கட்டடங்களும் கட்டப்படும். இந்த வருடம் 9 கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான விடுதிகள் ரூ.100 கோடியில் கட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நல்ல திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட 151 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆடையகம் அமைக்க தாட்கோ மானியத்துடன் (TAHDCO) கூடிய 'வங்கி கடன்' உதவி ஒரு பயனாளிக்கு ரூ.2 லட்சமும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கறவை மாடு வளர்க்க வங்கி கடன் உதவி 7 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு புதுக்குளம், புளியடி, ஈசாந்திமங்கலம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் ரூ.18 லட்சத்து 11 ஆயிரத்து 59 மதிப்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலம் உறுப்பினர் அடையாள அட்டை, பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 பயனாளிகளுக்கும் இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதித்த மக்களுக்கு தீருதவித் தொகை வழங்குதல் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்து 213 மதிப்பில் தீருதவி மற்றும் குடும்ப ஓய்வூதியமும், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள நபர்களின் இறப்பிற்கு ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.25,000 உதவி தொகையும் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.