கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, பரளியாறு, மணலோடை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்பது அரசு ரப்பர் தோட்டம் உள்ளது. அரசு ரப்பர் கழகத்தினால் பராமரிக்கப்படும் இத்தோட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் இடைக்கால ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை இறுதி பேச்சுவார்த்தையாக மாற்றி அரசாணை பிரப்பித்ததை கண்டித்தும், தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் , ரப்பர் கழக அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இக்கூட்டத்தில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என்றும், அரசு ரப்பர் கழகத்தில் அலுவலர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியளித்தார் என்று கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.