கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜுவல்லரியில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஒன்றரை கிலோ நகைகள் கொள்ளையடிக்கபட்டன. மேலும் இதே போன்று கடந்த ஜனவரி 28ஆம் தேதி மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடை, உரிமையாளர் வீட்டில் இருந்து மூன்று கிலோ நகைகள், இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
இது சம்பந்தமாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றிய காவல் துறையினர், ஐந்து தனிப்படைகளை அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மார்த்தாண்டம் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்தி விட்டு ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் விரட்டியதில், அந்த நபரது இடது கால் முறிந்து கீழே விழுந்துள்ளார். அவரைப் பிடித்த காவல் துறையினர் குழித்துறை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளித்த பின், நடத்திய விசாரணையில், மார்த்தாண்டம் பகுதியில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.