கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜவினு. இவர் 2019ஆம் ஆண்டு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி டிராவல் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இந்த தகவலை அறிந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரியான அசோக்குமார், பாலமுருகன் ஆகியோர் ராஜவினுவை சந்தித்து வெளிநாடு வேலை குறித்து விசாரித்துள்ளனர்.
குமரியில் போலி விசா தயாரித்தவர் கைது - கன்னியாகுமரி
கன்னியாகுமரி: இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி போலி விசா அளித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை ஏற்பாடு செய்துள்ளதாக கூறிய ராஜவினு, இருவரிடமிருந்தும் தலா ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்ட பின்பு விசா அளித்துள்ளார். அதை பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்ல இருவரும் தயாரான நிலையில், தங்கள் கையில் கிடைத்த விசா போலி என்பது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும் 2019ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜவினுவை காவல்துறையினர் தேடி வந்தனர். கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த ராஜவினு இன்று (நவ. 27) குலசேகரத்தில் இருப்பது தெரியவந்ததைத்தொடர்ந்து விரைந்து சென்ற குற்றப்பிரிவு காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.