கன்னியாகுமரி:திருவட்டாறை அடுத்து செறுகோல் பகுதியைச்சேர்ந்தவர்கள், வேணுகுமார் மற்றும் பிபின் சகோதரர்கள். இதில் தம்பியான பிபின், உண்ணாமலைக்கடை அருகே வாரியவிளை பகுதியைச்சேர்ந்த மகேஷ் என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார்.
இதனையடுத்து மிகுந்த மது போதையில் இருந்த பிபினை, அவரது நண்பர் மகேஷ், செறுகோல் பகுதியிலுள்ள அவரது வீட்டிற்குக்கொண்டுவிட வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பிபினின் அண்ணனான வேணுகுமார் தம்பியை குடிபோதைக்கு அடிமையாக்குவதாகக்கூறி நண்பனான மகேஷின் வாகனத்தை பறித்துள்ளார்.
இதை மகேஷ், தனது தந்தையிடம் கூறவே, அவரது தந்தை மனோகரன் வேணுகுமாரிடம், இருசக்கர வாகனத்தைக்கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த வேணுகுமார், இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து விட்டு, வாகனத்தை தீ வைத்துள்ளார். இதில் இருசக்கர வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமானது.