கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள் காசி, தினேஷ். இவர்கள், இளம்பெண்களை மயக்கி, ஆபாசமாகப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியது குறித்த புகாரின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், தினேஷ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பிணை கோரி மனு ஒன்றை தாக்கல்செய்தார்.
அதில், “நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் என் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்திய சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் காவல் துறையினர் என்னை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையிலுள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவருகிறேன். என் மீது கொடுக்கப்பட்ட பொய்யான புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், நான் சிறையிலிருந்து வருந்துகிறேன், எனவே தனக்கு பிணை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் மனுதாரருக்கு பிணை கொடுக்க எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட மடிக்கணினியில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறான முறையில் நடந்தது தெரியவந்ததாகவும் கூறினார். இவர்கள் மீது மேலும் சில வழக்குகள் உள்ளது எனக் கூறி பிணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
பின்னர், மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் கூறியதாவது, “இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு 90 நாள்களைக் கடந்துவிட்ட சூழ்நிலையில் தனிப்பிரிவு காவல் துறையினர் விசாரணை அலுவலர் குற்றப்பத்திரிகையை, இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே மனுதாரருக்கு பிணை வழங்க வேண்டும்” என வாதிட்டார்.