சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் சென்றுவருவது வழக்கம். பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தற்போது நான்கு படகுகள் இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் ஐந்தாவதாக திருவள்ளுவர் பெயரில் எம்.எல்.திருவள்ளுவர் படகு 4.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்னியாகுமரி வரலாற்றில் முதல்முறையாக அதிநவீன குளிரூட்டப்பட்ட புதிய சொகுசு படகு கோவாவிலிருந்து கட்டுமான பணிகள் நிறைவடைந்து நேற்று கன்னியாகுமரிக்கு வந்தடைந்தது.
இந்நிலையில் இன்று புதிய சொகுசு படகின் சோதனை ஓட்டம் கடல்சார் வாரியத்தின் அலுவலர்களால் பூம்புகார் படகுத் துறையில் இருந்து கடலுக்குள் சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து பரிசோதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், புதிய படகினை நிறுத்தி பயணிகள் ஏறிவதற்கும், இறங்குவதற்கும் ஏதேனும் சிரமம் உள்ளதா என ஆய்வு நடத்திய பின்னர், திருவள்ளுவர் படகு பூம்புகார் படகுத்துறைக்கு திரும்பியது.