தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2021, 9:19 PM IST

ETV Bharat / state

வழக்கறிஞர் தனுஜா விவகாரம்: போராட்டம் நடத்தப் போவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு!

பெண் வழக்கறிஞர் தனுஜா விவகாரத்தில், வழக்கறிஞர்களை தவறாக பேசிய நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் சென்னை உயர் நீதிமன்ற முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் தனுஜா விவகாரம்
வழக்கறிஞர் தனுஜா விவகாரம்

கன்னியாகுமரி: சென்னை, சேத்துப்பட்டில் சில தினங்களுக்கு முன்பு, போக்குவரத்து சிக்னலில் பெண் வழக்கறிஞர் தனுஜா பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் அவமரியாதையாக நடந்ததாக, தலைமை காவலர் ரஜித்குமார் அளித்த புகாரின் பேரில் தனுஜா, அவரது மகள் ப்ரீத்தி இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் ப்ரீத்திக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், தனுஜாவுக்கு பிணை வழங்கப்படவில்லை. இந்த பிரச்னை குறித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகி சத்தியசீலன் சக வழக்கறிஞர்களுடன் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "வழக்கறிஞர் தனுஜா நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியும் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. மேலும் நீதிபதி தண்டபாணி வழக்கறிஞர்கள் குறித்து அவமரியாதையான சொல் ஒன்றை கூறியுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிக்கும், கொலிஜியத்திற்கும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:’நான் யார் தெரியுமா...’ - போக்குவரத்துக் காவலர்களிடம் சவடால் விட்ட பெண் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details