மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வசந்த குமாரை ஆதரித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தேர்தல் பரப்புரை செய்தார்.
அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த அளவிற்கு நாம் கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். மோடி உங்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னாரே செய்தாரா? வேலை வாய்ப்பு தருவதாகச் சொன்னார்... அது நடந்ததா? பெண்களுக்கு பாதுகாப்புத் தருவதாகச் சொன்னார். பெண்கள் பாதுகாப்பாக இருந்தனரா? என பொதுமக்களிடம் அடுக்கடுக்கான கேள்வியெழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், 'காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை 450 ரூபாய் இருந்தது. இன்று 950 ரூபாய் அளவிற்கு உயர்ந்துவிட்டது. பெண்கள் வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சித் தொடர் பார்ப்பீர்கள். கேபிள் டிவி கட்டணம் 150 ரூபாய் இருந்தது. இன்று எல்லா சேனலும் பெறவேண்டுமானால் 350 ரூபாய் கட்டணம் ஆகிவிட்டது. விரும்பிய அலைவரிசைகளை நீங்கள் பார்க்க முடியாது என சுட்டிக்காட்டினார்.
இந்த மக்களவைத் தேர்தலில் இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வந்தால்தான் எல்லா மாற்றத்தையும் கொண்டுவர முடியும். எனவே புன்னகை மன்னன் வசந்தகுமாருக்கு வாக்களியுங்கள். கடந்த முறை தோல்வி அடைந்த போதும் உங்களுக்காக பணி செய்தார். காங்கிரஸ் மட்டுமல்ல திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும் வசந்தகுமார்தான்' எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் குஷ்பு.