தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுப்பொலிவு பெற்ற குமரி திருவள்ளுவர் சிலை.. கழுகு பார்வை வீடியோ! - kanyakumari district news

குமரிக் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி முடிவுற்ற நிலையில், அச்சிலை புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

புதுப்பொலிவு பெற்ற குமரி திருவள்ளுவர் சிலை.. கழுகு பார்வை வீடியோ!
புதுப்பொலிவு பெற்ற குமரி திருவள்ளுவர் சிலை.. கழுகு பார்வை வீடியோ!

By

Published : Feb 9, 2023, 9:36 AM IST

குமரிக் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் கழுகுப்பார்வை வீடியோ

கன்னியாகுமரி:சர்வதேச சுற்றுலாத் தளமாக உள்ள கன்னியாகுமரியில், கடந்த 2000ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் கடலுக்கு நடுவில் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அந்த நேரத்திலிருந்து வள்ளுவர் சிலை உப்புக் காற்றிலிருந்து சேதமடைவதைத் தடுப்பதற்காக, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த முறை சிலை பராமரிப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2022 ஜூன் மாதம் முதல் ரசாயன கலவை பூசும் பணி தொடங்கப்பட்டது. 133 அடி உயரம் கொண்ட சிலையைச் சுற்றி, சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்ட பின்னர், சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளைச் சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய் மற்றும் பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

பின்னர் காகிதக் கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு, சிலையில் படிந்துள்ள உப்பினை எடுக்கும் பணி நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து மீண்டும் தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டதை அடுத்து, ஜெர்மன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது.

இந்தப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், சிலையைச் சுற்றி அமைக்கப்பட்ட 60 டன் எடை கொண்ட இரும்பு சாரம் பிரிக்கப்பட்டு, அவை படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி முடிவுற்ற நிலையில், தற்போது சிலையின் உட்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள திருக்குறள் எழுத்துக்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அது மட்டுமில்லாமல், சுற்றுலாப் பயணிகள் காத்திருப்புக் கூடத்தினை சீரமைக்கும் பணி, மின் விளக்குகள் சரி செய்யும் பணி, சிலையின் தரைத் தளம் சீரமைக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடையும் எனவும், அதனையடுத்து வழக்கம்போல் மீண்டும் திருவள்ளுவர் சிலைக்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தொழில் போட்டியில் மீனவ படகுகள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!

ABOUT THE AUTHOR

...view details