கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகை இன்று (ஆகஸ்ட் 31) கொண்டாடப்படுகிறது. அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, பத்தாவது தினம் திருவோணமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தத் தினத்தன்று மகாபலி மன்னன் நாட்டு மக்களைக் காண வருவதாக ஐதீகம் உள்ளதால், கேரளா முழுவதும் பெண்கள் வீடுகளின் முன்னே அத்தப்பூ கோலங்கள் இட்டு கொண்டாடுவது வழக்கம்.
இதற்காக கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர்ச்சந்தையில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற சிறப்பு பூச்சந்தை களையிழந்து காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் பூக்கள் கேரள மாநிலம் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு கரோனா தடை உத்தரவு காரணமாக, கேரள வியாபாரிகளின் வருகை இல்லாததால், விற்பனை மந்தமாக காணப்பட்டது. இதனால் பூ வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.