கன்னியாகுமரி:நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஆதிமூல விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் எம்.எஸ். ரோடு ராஜபாதை பகுதியில் உள்ள நிலையில் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நிஷா பாப்பா என்ற பெண் டீக்கடை நடத்தி வந்துள்ளார்.
கடந்த 19 வருடங்களாக வாடகை கொடுக்காமல் நிஷா பாப்பா டீ கடையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கோயில் இடத்தை ஆக்கிரமித்து டீக்கடை நடத்தி வந்ததால் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை நிஷா பாப்பாவுக்கு அபராதமாக விதித்ததுடன் அந்த தொகையை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது.
இந்நிலையில் அபராத தொகையை செலுத்தாதலால் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து 3 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கால அவகாசம் முடிந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையிலான ஊழியர்கள் எம்.எஸ்.ரோட்டில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் நடத்தி வரும் டீக்கடையினை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.
வழக்கம்போல் நேற்று (செப் 5) கடையை திறந்த நிஷாவை அறநிலையத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து கடைக்குள் இருந்த அவரை வெளியேறுமாறு கூறினர். ஆனால் நிஷா கடையை விட்டு வெளியேற மறுத்த அவர் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடையின் உள்ளேயே அமர்ந்து கொண்டார்.