கன்னியாகுமரி: மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை, மின்னழுத்த குறைபாடுகள், களப்பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சினைகளில் கன்னியாகுமரி மாவட்டம் சிக்கி தவித்து வருவதாத பல்வேறு தொழிற்சங்கங்களால் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சி தொழிற்சங்கமே, மின்வாரிய வளர்ச்சி தடைபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பயனீட்டாளர்களை அதிர்ச்சி அடையை செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 53 மின் வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறைந்தபட்சம் ஒவ்வொரு
செக்சனுக்கும் 8,000 மின் இணைப்புகள் முதல் அதிகபட்சமாக 15 ஆயிரம் மின் இணைப்புகள் இருப்பது வழக்கம். அதிலும் வல்லன், குமாரவிளை போன்ற செக்சன்களில் 20 முதல் 25 ஆயிரம் மின் இணைப்புகள் வரை உள்ளன. இதுபோன்று பல செக்சன்களிலும் கூடுதல் மின் இணைப்புகள் உள்ளதால் மின்னழுத்த குறைபாடுகள் இருந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை பெரும்பாலான இடங்களில் பழைய மின் கம்பங்கள் இன்னும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றை மாற்றி புதிய மின் கம்பங்கள் நிறுவ வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய வயர்களை மாற்றி புதிய வயர்களை இணைக்க வேண்டும் என்றும், மின்னழுத்த குறைபாடுகளை தீர்க்க பழைய டிரான்ஸ்பார்மர்களை மாற்றி புதிய ட்ரான்ஸ்பார்மர்களை நிறுவ வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் புதிய மின்கம்பங்கள் நிறுவுவதற்கும், புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பது, பழைய வயர்களை மாற்றி புதிய வயர்களை இணைப்பது போன்ற பணிகளுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு இன்னும் டெண்டர் விடாமல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் என்பவர் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கன்னியாகுமரி மின் பகிர்மான மாவட்டச் செயலாளரும் மாநில துணைப் பொதுச் செயலாளருமான விஜயகுமார் கூறியதாவது, "கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நலிவுற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. ஊழியர் பற்றாக்குறை, ஒப்பந்த பணிகளில் சுணக்கம் போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தன.
இந்நிலையில் தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்ட மக்களின் மின் தேவை பூர்த்தி செய்யவும், தேவைக்கேற்ற அழுத்தத்துடன் மின்சாரம் வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒப்பந்த பணிகளுக்கான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைய மின் கம்பங்களை மாற்றி விட்டு புதிய மின் கம்பங்களை நட்டு மின் கம்பிகளை இழுத்து கட்டுவது, ட்ரான்ஸ்பார்மர் அமைப்பது, சைஸ் ஆஃப் கண்டக்டர் சேஞ்ச் எனப்படும் பழைய கம்பி வயர்களை மாற்றிவிட்டு புதிய கம்பி வயர்களை கட்டுவது போன்ற வகையில் 50 கோடி ரூபாய்க்கான டெண்டர் இன்னும் விடபடாமல் உயர் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர்.
மேலும், தகுதி இல்லாத நபர்களை வைத்து வீடுகளில் மின் இணைப்பு குறித்து சோதனை நடத்தி, அளவுக்கு அதிகமான அபராதங்கள் விதிப்பது, ஊழியர்களின் இடம் மாற்றங்களின் போது விதிகளை கடைபிடிக்காமல் செயல்படுவது போன்ற பல்வேறு பிரச்சனைகளும் மின்வாரியத்தில் நீடித்து வருகின்றன. இவற்றை எல்லாம் சரி செய்ய மின்துறை அமைச்சருக்கும், வாரிய தலைவருக்கும் கோரிக்கைகள் எடுத்து வைத்துள்ளோம்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,000 களப்பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மின்துறை அமைச்சர் மற்றும் வாரிய தலைவரிடம் வைத்த கோரிக்கை விரைவில் நடை முறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 53 மின்வாரிய அலுவலகங்கள் உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சப் ஸ்டேஷன்கள் அதிக அளவில் நுகர்வோர்களை கொண்டதால் கூடுதலாக 12 மின்வாரிய அலுவலகங்கள் திறக்கவும் தொழிற்சங்கம் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். இதன் பலனாக அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.