கன்னியாகுமரி:ஒடிசா ரயில் விபத்து சம்பந்தமாக அங்குப் பணிபுரியும் இஸ்லாமியர் ஒருவரை விசாரிக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க ஆதரவாளரான வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவரை தக்கலை போலீஸார் இன்று (ஜூன் 8) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தக்கலை காவல் நிலைய எல்லையில் பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்தும் படி ஒரு கருத்தைப் பதிவிட்டு உள்ளார். ஏற்கனவே விபத்து நடந்த இடத்தில் ஒரு மசூதி இருந்ததாக புரளி பரவி வந்த நிலையில் செந்தில்குமாரின் இந்த ட்விட்டர் பதிவு இன்னும் சர்சையை பரப்பியுள்ளது.
அதில் அவர் ”இதுவரை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 300-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கிறது. 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து இருக்கின்றனர். விபத்து நடந்த ரயில் நிலையத்தின் பெயர் பஹாநாகா. இந்த ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் பெயர் முகமது ஷெரீப் அகமது. விபத்து குறித்து விசாரிக்க..” எனக் குறிப்பிட்டதுடன், ஸ்டேஷன் மாஸ்டர் புகைப்படம் ஒன்றையும் பதிவுசெய்திருந்தார். பின்னர், தான் போட்ட இந்தப் பதிவு தவறானது என்றும், யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும் எனவும் பதிவிட்டிருந்தார்.