கன்னியாகுமரி:கரும்பாட்டூர் அடுத்த சோட்டபணிக்கன் தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (65). வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள்.
இவர், தனது குழந்தைகளை அரசு பணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அதிக கவனத்துடன் இருந்துள்ளார். இதனால், வரதராஜன் தனக்கு கிடைக்கும் வருமானத்தை குழந்தைகளின் படிப்பிற்காக அதிமாக செலவு செய்துள்ளார்.
விடாப்பிடியான முயற்சி
இதில், இவரது மூன்றாவது மகளான செல்சாசினி இந்திய குடிமைப்பணித் தேர்வுக்கு மட்டுமே படிப்பேன் என்பதில் விடாப்பிடியாக இருந்து அதற்கு பயிற்சிப் பெற்று வந்துள்ளார். தனது மகளின் நலனுக்காக சொந்த ஊரில் இருந்து நாகர்கோவிலுக்கு குடிபெயர்ந்த வரதராஜன், மகள் படிப்பிற்கு அதிக அக்கறையுடன் செயல்பட்டு வந்தார்.
இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் செல்சாசினி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து மிசோரியில் நடந்த ஐஏஎஸ் அலுவலர்களுக்கான பயிற்சியில் கலந்துகொண்டு அவர் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட சார்நிலை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த அவரது தந்தை உள்பட உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வெற்றி பெற்ற அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை கல்லூரிகள் திறப்பு!