கன்னியாகுமரி: மயிலாடி அருகே சுப்பிரமணியபுரம் காலனியில் ஆதிதிராவிடர் நலத் துறையால் வழங்கப்பட்ட வீடுகளை சட்டத்திற்குப் புறம்பாக விலைக்கு வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, குமரி மாவட்ட ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனத் தலைவர் ஜான் விக்டர்தாஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், மயிலாடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள சுப்பிரமணியபுரம் காலனியில், ஆதி திராவிடர்களுக்கு 31 வீடுகள் வழங்கப்பட்டன.
ஆதிதிராவிடர்கள் மட்டுமே வசிக்கும் இக்காலனியில், மயிலாடி பகுதியைச் சேர்ந்த ஜெயா, அவரது கணவர் பூபதி ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாக, இரு வீடுகளை விலைக்கு வாங்கியுள்ளனர். மேலும் சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய இரு வீடுகளையும் ஆதிதிராவிடர் அல்லாத மாற்று சமூகத்தினருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.