தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த வசந்தகுமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய, அக்கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, ” மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்கு ஆளுநர் தடையாக இருப்பதை ஏற்க முடியாது. மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் தேர்வு எழுதும் வகையில் நீட் தேர்வு அமைய வேண்டும்.
12 ஆயிரம் ஆண்டு கால இந்திய வரலாற்றை மாற்றுவதற்கு பாஜக முயல்கிறது. இதற்காக அரசால் அமைக்கப்பட்ட கலாசாரக் குழுவில், இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே உள்ளனர். இந்த குழுவைக் கலைக்க வேண்டும். கரோனா பெருந்தொற்று மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதை வைத்து தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கின்றன. ஆனால், அதனை தடுக்க அரசு தவறிவிட்டதோடு, தொற்றை கட்டுப்படுத்துவதிலும் கோட்டை விட்டுவிட்டது.