தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்திராயன் 2: தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு - இஸ்ரோ தலைவர் - நிலா

கன்னியாகுமரி: சந்திராயன் 2 விண்கலம், இதுவரை யாரும் ஆராய்ச்சி செய்திராத தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன்

By

Published : May 3, 2019, 11:50 PM IST

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம், சரக்கல்விளை பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

" சந்திராயன் 2 விண்கலம், ஜூலை 9 முதல் 16ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். செப்டம்பர் 6ஆம் தேதி, சந்திராயன் 2 நிலவில் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. விண்கலம் நிலவில் தரையிறங்கியதும், அங்கு நீர் உள்ளதா, நிலவின் தரை பகுதியின் தன்மை போன்றவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும். இதுவரை நிலவுக்கு சென்ற விண்கலம் எல்லாம் பூமத்திய ரேகை பகுதியில் தான் இறங்கியுள்ளது.

ஆனால், சந்திராயன் 2, இதுவரை யாரும் இறங்காத இடமான தென் துருவத்தில் இறங்கும். முதல் முறையாக, தென் துருவத்தில் சந்திராயன் 2 இறங்கவுள்ளது. இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வாய்ப்புள்ளது", என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பல திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மாணவர்களின் அறிவியல் எண்ணங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இளம் விஞ்ஞானி என்ற திட்டத்தை 'இஸ்ரோ' அறிமுகம் செய்துள்ளது. வரும் 13ஆம் தேதி, இப்பயிற்சி துவங்குகிறது. மாநிலத்துக்கு 3 மாணவர்கள் வீதம், நாடு முழுவதும் தேர்வான 108 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டம் தொடரும்.

அடுத்தாண்டு முதல் பாதியில் சூரியனை ஆராயும் வகையில், “ஆதித்யா எல் 1” என்ற விண்கலம் விண்ணில் ஏவப்படும். இவற்றின் மூலம் சூரியன் குறித்து தெரியாத பல தகவல்களை கண்டறியும் திட்டமாகும். இதேபோல் வீனஸ் உள்பட பல்வேறு கிரகங்களை ஆராயும் முயற்சியிலும் இஸ்ரோ இறங்கியுள்ளது. ககன்யான் திட்டத்தை வெற்றி பெறவைக்கும் முழு முயற்சியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. 2022ஆம் ஆண்டிற்குள் இந்தியா மனிதனை விண்ணிற்கு அனுப்பும்.

ஃபோனி புயலின் நகர்வை துல்லியமாக, முன்னரே கணிப்பதற்கு செயற்கைகோள் படங்கள் பேருதவியாக அமைந்தது. முன்னரே புயல் நகர்வை கண்டறிந்ததால், பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாக்க முடிந்தது", என தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன்

ABOUT THE AUTHOR

...view details