கன்னியாகுமரி:சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கும் விதமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் தமிழ்நாடு அரசு எம்.எல். குகன், எம்.எல். பொதிகை, எம்.எல். விவேகானந்தா ஆகிய மூன்று படகுகளை இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் கடலில் நீண்ட நேரம் பயணம் செய்து இயற்கை அழகை பார்பதற்கு வசதியாக குளிரூட்டப்பட்ட அதிநவீன சுற்றுலாப் படகுகளான எம்.எல். தாமிரபரணி, எம்.எல். திருவள்ளுவர் ஆகிய இரண்டு படகுகள் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டன.
இவை கடந்த 3 வருடங்களாக சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் நிருத்தி வைக்கபட்டு இருந்தது.
இதற்கு கன்னியாகுமரி படகு துறையில் இடவசதி இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது. இந்த சொகுசு படகுகள் வடிவமைப்பில் பெரியதாக உள்ளதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல படகு தளம் ஏற்றதாக இல்லை. படகுத் துறையில் 2 நவீன படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் இடநெருக்கடி நிலவி வருகிறது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்ற 3 படகுகளும் படகு துறைக்குள் வந்து செல்வவதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து வருகின்றன. இதை தவிர்க்க படகுத் துறையின் தெற்கு பக்கம் உள்ள கடல் பகுதியில் 7 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக ஒரு படகு தளம் புதிதாக அமைக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இந்த நிலையில் இந்த இரு படகுகளையும் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வு மேற்கொண்டனர். இந்த படகுகள் கன்னியாகுமரி பூம்புகார் படகு தளத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அருகாமையில் உள்ள வரலாறு சிறப்புமிக்க வட்டக்கோட்டை வரை கடல் வழியாக சுமார் 1 மணி நேரம் பயணம் மேற்கொள்ள திட்டமிடபட்டது.
இந்நிலையில், 2 நவீன படகுகளும் இன்று (மே 24) சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நவீன வசதிகளுடன் கூடிய இந்த இரண்டு சுற்றுலாப் படகுகளும் முக்கடல் சங்கமிக்கும் பூம்புகார் படகு தளத்தில் இருந்து புறப்பட்டு வட்டகோட்டை வரை 4.5 கடல் மைல் அளவிலான நீண்ட தூர பயணமாக இயக்கப்படுகிறது.
இதற்காக சுற்றுலாப் பயணிகளிடம் நபர் ஒன்றுக்கு குளிரூட்டபட்ட படகில் பயணம் செய்ய 450 ரூபாயும், சாதாரன கட்டணமாக 350 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தொடர்ந்து கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளூர் சிலைக்கும் இடையே 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கண்ணாடிகளால் ஆன கூண்டு பாலம் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கி வைக்கபட்டது.
இதையும் படிங்க:'நிம்மதியாக இருக்க முடியாது' - எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்