கன்னியாகுமரியில் இந்திய மருத்துவ சங்கத்தின் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மருத்துவத் துறை, மருத்துவத் தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெற உள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மருத்துவ சங்கத்தினர் எதிர்ப்பு இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் ஜெயலால் கூறியதாவது:- இந்திய மருத்துவ சங்கத்தில் தற்போது சுமார் 3.5 லட்சம் மருத்துவர்கள் உறுப்பினராக உள்ளனர். இதில் உள்ள தேசிய ,மாநில, பிராந்திய அளவிலான தலைவர்களின் 2 நாள் மாநாடு நடக்கிறது .
இம்மாநாட்டில் மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறோம். அதாவது மருத்துவமனை மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் வரவேற்கிறது. இவற்றை உடனே நிறைவேற்ற முன்வர வேண்டும்.
அதே நேரத்தில் ஜனநாயக முறை அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தன்னாட்சி அமைப்பு பிரதிநிதித்துவம் இல்லாததோடு சர்வாதிகார அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முயற்சியில் ஈடுபடும் மத்திய அரசை கண்டிக்கிறோம். இதை எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். இவற்றை கைவிடாவிட்டால் நாடு தழுவிய அளவில் இந்திய மருத்துவ சங்கம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும்.
மத்திய அரசின் தேசிய மருத்துவமனை தேர்ந்தெடுத்த சித்த, ஆயுர்வேத , அலோபதி மருத்துவர்கள் ஆகும் வகையில் விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர், செயலாளரை மத்திய அரசு நியமிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த சட்டத்தை எதிர்க்கிறோம் இது ஜனநாயகத்துக்கு எதிரானது .
இந்த சட்டத்தின் மூலம் மருத்துவ கட்டணத்தை தனியார் கல்வி நிறுவனங்கள் தாங்களாகவே நிர்ணயிக்க முடியும். மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க முடியாத சூழலை ஏற்படுத்தும். ஆகையால் இந்த மசோதாவை கொண்டுவரும் முயற்சியை கைவிட வேண்டும், ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த மசோதாவை எதிர்க்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.