சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிநாடு, உள்நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் இங்கு வந்து தங்க வசதியாக கன்னியாகுமரியில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை காண விலையுயர்ந்த பொருட்களை விடுதி அறைகளில் வைத்துவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் விடுதி அறைகளை திறந்து ரொக்கப்பணம், செல்போன் போன்ற விலையுயர்ந்த பொருட்களைத் திருடிவிட்டு செல்லும் சம்பவங்கள் குமரியில் நடந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி காவல் துறை சார்பில் தொடர் திருட்டில் ஈடுபடும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.