கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே உள்ள வெள்ளமடம் பகுதியில், தனியார் கையுறை தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலையில் உள்ளூர், வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
நள்ளிரவில் தொழிற்சாலையின் எரிவாயு உருளைகளில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டு, மிகப்பெரிய அளவில் தீப்பற்றியது. தொடர்ந்து வாயுக்கசிவால் தொழிற்சாலை அருகே உள்ள வெள்ளமடம், அனந்த பத்மநாபபுரம், அதனைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், பல மணி நேரம் போராடி, எரிவாயு உருளைகளில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் சுற்றியுள்ள ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர்.