கன்னியாகுமரி:கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி அதிகாலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட ஒகி புயலின் தாக்கம் சுமார் 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதன் காரணமாக கடற்கரை கிராமங்கள் முதல் நகரப் பகுதிகளிளும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு முறையான அறிவிப்பு வழங்காததால் கரை ஒதுங்க முடியாமல் குமரி மாவட்டத்தை சேர்ந்த 177 மீனவர்கள் வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கினர்.
மேலும், குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் உட்பட 224 மீனவர்கள் பலியானார்கள். தற்போது அவர்கள் பலியான 5-வது ஆண்டு தினம் இன்று (நவ.30) கடற்கரை கிராமங்களில் அஞ்சலி நிகழ்ச்சியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தெற்காசிய மீனவர் கூட்டமைப்பு சார்பாக கடலில் விசைப்படகில் சென்று பிரார்த்தனைகள் செய்து கடலுக்குள் மலர்கள் தூவினர். பின்னர் இறந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி ’கடல் வீரர்கள் தினம்’ என்ற வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.