கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைப் பகுதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மலர்களால் அலங்கரிக்கபட்ட வாகனத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை பகுதியில் மகிஷாசூர அரக்கனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம், கேரள செண்டை மேளங்கள், அம்மன் அரக்கனை வதம் செய்யும் காட்சிகள் அடங்கிய வாகன ஊர்திகள் ஊர்வலமாக வந்தன. பின்னர் காளி உள்பட மூன்று அம்மன்கள் சேர்ந்து மகிஷாசூரனை வதம் செய்யும் தத்துரூப நாடகம் தோவாளை மலர்ச் சந்தை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இதனை ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர், நாகர்கோவில், கன்னியாகுமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தார்கள். இந்நிகழ்ச்சியையொட்டி நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.