தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Sivalaya Ottam: மகா சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களுக்கு ஓடிச்சென்று வழிபாடு.. சிறப்பம்சம் என்ன? - in Sivalaya Ottam

இந்தியாவிலேயே மகா சிவராத்திரி நாளில், 'கோவிந்தா! கோபாலா!' என்ற கோஷத்துடன் 12 சிவாலயங்களுக்கு ஓடிச் சென்று வழிபடும் 'சிவாலய ஓட்டம்' கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 18, 2023, 9:45 AM IST

குமரியில் 'சிவாலய ஓட்டம்' - மகா சிவராத்திரி நாளில் 12 சிவன் கோயில்களுக்கு ஓடிச் சென்று வழிபாடு

கன்னியாகுமரி:மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று (பிப்.18) நாடெங்கும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகங்களும், சிறப்புப் பூஜை வழிபாடுகளும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. இதனைக் காண பாரம்பரிய முறைப்படி 'சிவாலய ஓட்டம்' என்று இரவு முழுவதும் அனைத்து சிவாலயங்களுக்கும் ஓட்டமாக ஓடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பெரும்பாலும், இந்த மகா சிவராத்திரி நாளில் 'ஓம் நமச்சிவாயா' என்ற திருமந்திரமே எட்டுத்திக்கும் கேட்கும். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இதற்கு மாறாக, புகழ்பெற்ற 12 சிவன் ஆலயங்களிலும் இன்று 'கோவிந்தா! கோபாலா!' என்ற திருமாலின் நாமம் கேட்கும். இந்த முரணான வழிபாடு ஏனெனில், சிவனும் நாராயணனும் வெவ்வேறு அல்ல; இருவரும் ஒன்றே என்பதை நிலைநாட்டவே இவ்வாறு இங்கு வழிபாடு நடக்கிறது எனக்கூறப்படுகிறது.

மகா சிவராத்திரியையொட்டி, ஏகாதசி நாளிலிருந்து தீயினால் சுட்ட உணவுகளை அருந்தாமல் விரதமிருந்து தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காகப் பக்தர்கள் முதல் சிவாலயமான முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து துவங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருதந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்காடு, திருவிதாங்கோடு, திற்பந்நிகோடு மற்றும் திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆலயம் வரை உள்ள 12 சிவாலயங்கள் 108 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி சென்று வழிபடுவது 'சிவாலய ஓட்டம்' என்றழைக்கப்படுகிறது.

இந்த சிவாலய ஓட்டம் நேற்று முஞ்சிறை திருமலை மகாதேவர் திருக்கோயிலிலிருந்து துவங்கியது. இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து 108 கிலோமீட்டர் ஓடி ஓடிச் சென்று வழிபடுகின்றனர்.

இதற்கென ஒரு புராணக்கதையும் கூறப்படுகிறது. புருஷாமிருகம் என்பது இடுப்புக்கு மேல் மனிதனும், கீழ் புலியுமாக தோற்றம் கொண்டது. இந்த உருவத்தை புலிக்கால் முனிவர் வியாக்ரபாதரே சிவனிடம் தவமிருந்து எடுத்தார் எனக் கூறப்படுகிறது. புருஷாமிருகத்திற்கு 'விஷ்ணு' என்றால் சுத்தமாக ஒத்துவராது. அதனாலே, அவர் நாமத்தை எவராது தன் செவியில் விழும்படி தன் எல்லைக்குள் உச்சரித்தால் அவரை புருஷாமிருகம் தாக்கும் என்பது புராணம். அதேநேரத்தில், ஆனால் தவத்தைவிடவும் புஜ வலிமைதான் பலம் என பீமன் நம்பிக்கொண்டிருந்தார். இருவருக்கும் அரி, சிவன் ஆகியோர் ஒன்று என பாடம் புகட்ட நினைத்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

இதனால் தர்மர் நடத்திய யாகத்திற்குப் புருஷாமிருகத்தின் பாலை எடுத்து வர பீமனுக்கு உத்தரவிட்டார், கிருஷ்ணர். பீமன் தயங்கினார். அவரை தைரியப்படுத்த பன்னிரெண்டு ருத்திராட்சக் கொட்டைகள் கொடுத்து, புருஷாமிருகம் தாக்க வந்தால் பீமனை பயன்படுத்திக் கொள்ள கிருஷ்ணர் சொன்னார். தாக்க வரும்போது கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடவேண்டும் என்பதுதான் கிருஷ்ணரின் வாக்கு.

அப்படி கீழேப் போட்டால் அது சிவலிங்கமாக மாறிவிடுமாம். அதை கண்டால் புருஷாமிருகம் வணங்கும்; அப்போது பீமன் தப்பிக்கலாம் என்பதுதான் கிருஷ்ணர் பீமனுக்கு கூறியது. இதைக்கேட்ட பீமன், திருமலைக்கு சென்று தவத்திலிருந்த புருஷாமிருகத்தை அழைத்தார். தவம் கலைந்த புருஷாமிருகம் கோபம் கொண்டு தாக்க வந்தபோது, பீமன் ருத்திராட்சத்தை கீழே போட்டார். பின் தோன்றிய சிவலிங்கத்தைப் புருஷாமிருகம் வணங்கியது.

பீமன் 'கோவிந்தா! கோபாலா!' என அழைக்க புருஷாமிருகம் தவம் கலைய, மீண்டும் பீமன் ருத்திராட்சத்தைப் போட, புருஷாமிருகம் சிவனை வணங்கியது. இப்படியே 12 இடங்களில் ருத்திராட்ச கொட்டை போடப்பட்டது. அதில் 12 ஆவது இடம் தான் திருநட்டாலம். இங்கு ருத்திராட்ச கொட்டை போட்டபோது, பீமன் மாட்டிக் கொண்டதாகவும் அப்போது பீமனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லையிலும் மற்றொரு கால் வெளியேவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தர்மரிடம் நியாயம் கேட்கப்பட்டது. தன்னுடைய சகோதரர் சிக்கலில் இருப்பதை அறிந்த புருஷாமிருகத்தின் எல்லையில் இருக்கும் பாதி உடல் அதற்குத்தான் சொந்தம் என்றார் தர்மர் சிக்கலான தருணத்தில் அங்கு தோன்றிய கிருஷ்ணர், 'அரியும் சிவனும் ஒன்றுதான்' என உணர்த்தி பிரச்சனையை சுமூகமாக முடித்தார். அதன் பிறகு யாகத்திற்கு புருஷாமிருகம் உதவியது. இதைக் குறிக்கும் வகையில் 12 சிவன் கோயில்களை வணங்க சிவாலய ஓட்டம் நடக்கிறது என்பது ஐதீகம்.

இந்தியாவிலேயே மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் 12 சிவாலங்களை ஓடிச் சென்று வழிப்படும் வழிபாடு குமரி மாவட்டத்தில் மட்டுமே நடப்பது குறிப்பிடத்தக்கது. மகா சிவராத்தி முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Maha Shivratri: கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக்கூடாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details