தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் முதல் புனிதராகிறார் தேவசகாயம் - அடுத்த ஆண்டு மே மாதம் வாடிகனில் விழா

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் தமிழ்நாட்டின் முதல் புனிதராகிறார். அடுத்த ஆண்டு மே 15ஆம் தேதி வாடிகனில் நடைபெறவுள்ள ஆன்மிக நிகழ்வில் போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை வழங்குகிறார்.

devasahayam
devasahayam

By

Published : Nov 12, 2021, 11:05 PM IST

குமரி:குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் தமிழ்நாட்டின் முதல் புனிதராகிறார். அடுத்த ஆண்டு மே 15ஆம் தேதி வாடிகனில் நடைபெறவுள்ள ஆன்மிக நிகழ்வில் போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை வழங்குகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். கடந்த 1712ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் வாசுதேவன்-தேவகியம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் நீலகண்டபிள்ளையாகும்.

1745ஆம் ஆண்டு ஞானஸ்நானம்

கடந்த 1745ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி கிறிஸ்தவ சமயத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.

1752ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் காரணமாக கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் மறைசாட்சியாக தேவசகாயம் அறிவிக்கப்பட்டார்.

தமிழ்நாடு கத்தோலிக்க திருச்சபை மற்றும் கன்னியாகுமரி கோட்டார் மறை மாவட்டம் மற்றும் இறை மக்கள் சார்பாக தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கக்கோரி வாடிகனில் செயல்பட்டு வரும் புனிதர் பட்டமளிப்பு பேராயத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் முதல் நிகழ்வாக மறைசாட்சி தேவசகாயத்துக்கு முக்திப்பேறு பெற்றவர் என கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவிலில் உள்ள கார்மல் பள்ளியில் நடைபெற்ற முக்திப்பேறு அளிக்கும் விழாவில் போப் ஆண்டவரின் பிரதிநிதியாக இந்தியாவின் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ பங்கேற்று முக்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.

அடுத்த ஆண்டு விழா

இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கலாம் என்ற அறிவிப்பை போப் ஆண்டவர் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து 3-5-2021 அன்று வாடிகனில் நடந்த கர்தினால்கள் கூட்டத்தில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் இடமாக, வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கம் அறிவிக்கப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வருகின்ற 2022ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி தேவசகாயத்துக்கு வாடிகனில் நடைபெறும் விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என நேற்று முன் தினம்(நவ.10) அறிவிப்புச் செய்யப்பட்டது.

இந்த உத்தரவை புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே, புனிதர் பட்டத்திற்கான திருப்பணிக்குழுவின் வேண்டுகையாளர் அருட்பணியாளர் டான் ஜோசப் ஜான் எல்பெஸ்டனுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த உத்தரவு கடிதத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் புனிதர் பட்ட திருப்பணியின் துணை வேண்டுகையாளரும், கோட்டார் மறைமாவட்ட பொறுப்பாளருமான அருட்பணியாளர் ஜான் குழந்தைக்கும் அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதம் குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான தேதி இன்று (அதாவது நவ.10) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடிதத்தை புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளர் பேபியோ பபானே அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் முக்திப்பேறுபெற்ற தேவசகாயம் என்னும் லாசருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வருகிற 2022ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்திப்பேறு பெற்ற மேலும் 5 பேருக்கும் புனிதர் பட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது.

புனிதர் பட்டங்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்குவார். இந்த விழாவில் இந்தியாவிலிருந்து ஏராளமானோர் வாடிகனுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

முக்திப்பேறு பெற்ற தேவசகாயம் இந்தியாவில் திருமணமான பொதுநபர்களில் முதன்மையானவர் என்ற பெருமையையும், குமரி மாவட்டம் மட்டுமன்றி தமிழ்நாட்டின் முதல் புனிதராகவும் போற்றப்படுகிறார்.

இதையும் படிங்க: கனமழையால் சேதமடைந்த சாலை - ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கும் கிராம மக்கள்

ABOUT THE AUTHOR

...view details