கன்னியாகுமரி:கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களுடன் தொடர்பில் இருந்த உறவினா்கள் 4 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் ரத்த மாதிரிகள் நிபா தொற்று பரிசோதனைக்காக புனேவில் அமைந்துள்ள தேசிய தீநுண்மியியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனையின் முடிவில், உயிரிழந்த 2 பேருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். உயிரிழந்தவா் ஒருவரின் 9 வயது மகன் மற்றும் உறவினா் என 2 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 5 ஆவது நபர் கண்டறியப்பட்டு உள்ளார். அவர் 24 வயதான சுகாதாரப் பணியாளர் என்பது தெரிய வந்துள்ளது. நிபா பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பு கொண்ட 77 நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தொடர்பில் இருந்த 700 பேரின் உடல் நிலையை அரசு கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் நிபா வைரஸ் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் முக்கிய வழி தடங்களான களியக்காவிளை, கோழிவிளை, காக்காவிளை, பளுகல் மற்றும் நெட்டா ஆகிய 5 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து சுகாதார ஆய்வாளர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் பரிசோதனை நடத்தி நோய் அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.
மேலும், இந்த கூட்டத்தில் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் மூலம் நோய் கண்காணிப்பு பணி முழுமையான அளவில் நடைபெற்று வருவதுடன் அதன் மூலம் சந்தேகப்படும் நோயாளிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.