கடந்த மக்களவைத் தேர்தலில் குமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் ஏற்கனவே தான் வகித்துவந்த நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்து, குமரி தொகுதியில் எம்.பி. வேட்பாளராகப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் இவ்வாறு போட்டியிடும்போது குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குமரி மாவட்டத்தில் எம்.பி. பதவிக்கு போட்டியிட தகுதியான ஆள்கள் இல்லையா என குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் பலர் அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், குமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குள்ளாக இரு பிரிவாக மோதிக்கொண்டனர். அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி குமரி மாவட்ட எம்.பி. வசந்தகுமார் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் பேசிய முழு விவரம் வருமாறு:
காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் அவரது இல்லத் திருமணத்திற்கு என்னை அழைத்திருந்தார். திருமணத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. சிறிது தாமதமாகச் சென்றேன். அப்போது சாப்பாடு பந்தி நடந்துகொண்டிருந்தது.
காங்கிரஸ் கட்சியினர் கண்டிப்பாக நான் சாப்பிட்டுவிட்டுதான் செல்ல வேண்டும் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து நானும் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டேன். அப்போது நான் இருக்கும் இதே காங்கிரஸ் கட்சி சார்பில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஒருவர் இங்க பாரு ஒரு காங்கிரஸ் எம்.பி. திண்ணுகிட்டு இருக்கான். இவன் எல்லாம் ஒரு மனுஷனா என என் காதுபட பேசிக் கொண்டே போனார்.
காங்கிரஸ் கட்சியில் எம்.பி.யாக இருக்கும் என்னை, ஒரு காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவரே என் காதுபட கேட்கிறார். இது சாப்பிட்ட என் தப்பா, அழைத்த காங்கிரஸ் நிர்வாகிகள் தப்பா, இல்ல சாப்பிட வசந்தகுமார் சாப்பிட வழியில்லாமல் அங்கு போய் சாப்பிட்டேனா?