கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில் மற்றும் மீனவர்கள் சார்பில், இத்தாலி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, நஷ்ட ஈடு பெற்றுத்தரக் கோரி மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், ”கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தை சேர்ந்த பிரெடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், குமரி மாவட்டத்து மீனவர்கள் பத்து பேர் கேரளாவை சேர்ந்த ஒரு மீனவர் ஆகியோர் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இத்தாலி படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சார்ந்த அஜிஸ் பின்க் என்ற மீனவரும் , கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜாலஸ்டின் என்ற மீனவரும் கொல்லப்பட்டார்கள்.
இதில் உடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்டம் இரையுமந்துறையை சேர்ந்த கிலைமன்ஸ், கில்சரியான், ஹில்லாரி, பிரான்சிஸ், ஜான்சன், முத்தப்பன் மற்றும் பூத்துறை மீனவர் கிராமத்தைச் சார்ந்த மார்டின், மிக்கேல் அடிமை ஆகிய மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அவர்கள் அனைவரும், சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் தாண்டியும் மனதளவில் பாதிக்கப்பட்டு இன்றும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல இயலாமல் அச்சத்தில் இருக்கிறார்கள்.