தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் 45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மீனவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழிலை தொடங்கியுள்ளனர். தற்போது மேற்கு கடல் பகுதிகளான அரபிக்கடல் பகுதிகளில் தடைக்காலம் தொடங்கவிருக்கிறது.
படகு மராமத்துப் பணிகளுக்காக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் - மீனவ சங்கங்கள்!
கன்னியாகுமரி: அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடித் தடை காலம் தொடங்குவதை அடுத்து படகுகளின் மராமத்து பணிகளுக்காக, ரூ.5 லட்சம் வட்டியில்லா கடனுதவி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்கங்கள் மனு அளித்தனர்.
அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், குளச்சல் முதல் கேரளா உட்பட குஜராத் வரை வரும் 15 ஆம் தேதி மீன்பிடித் தடைக்காலம் தொடங்கவுள்ளது. இந்தத் தடைக்காலத்தில் படகுகளின் மராமத்து பணிகளுக்காக அரசு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும் என, குளச்சல் பகுதி தூத்தூர் மண்டலம் மீனவ சங்கப் பிரதிநிதிகள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், கரோனா தடைக்காலத்தில் வருமானம் இழந்து தவித்து வரும் மீனவர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும். அரசு ஜூன் ஒன்றாம் தேதி முதல் குளச்சல் உள்ளிட்ட மாவட்டத்தின் மேற்கு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மீனவர்களுக்கு நிதி உதவி வழங்காமல் இருப்பதற்கான முயற்சி. இதனை நாங்கள் கண்டிக்கிறோம் என்றனர்.