கன்னியாகுமரி:பூமியில் நாம் வாழ்வதற்குக் கடல் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து உள்ளது. கடல்வழியாக உலக நாடுகளின் போக்குவரத்து கடல் மார்க்கமாக நடைபெற்று வருகிறது . கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதோடு ஆக்சிஜன் உற்பத்தி செய்தும் முக்கியமான மருந்துகளின் மூலப் பொருட்களையும் வழங்குகிறது.
மேலும் காலநிலை மாற்றங்களைச் சீரமைக்கப் பேரும் உதவியாக உள்ளது. கடல், சில சமூகத்தினரின் வாழ்வாதாரமாக உள்ளது ஆனால் நெடுங்காலம் அழியாத தன்மை கொண்ட நெகிழி (பிளாஸ்டிக்) மற்றும் பல்வேறு வகையான குப்பைகள் கடலினை சீரழிக்கின்றன. நேரடியாக மக்கள், கடலில் நெகிழிக் குப்பைகளைப் போடுவதாலும், கழிவு நீர் ஓடைகள், ஆறுகள் வழியாகப் பெருமளவு நெகிழியின் கழிவு கடலில் கலந்து வருகிறது.
கடல், இன்று சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது மீன்கள் மற்றும் கடலில் வாழும் மற்ற உயிரினங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மீன்கள் வாழும் கடலில் காற்றாலை நிறுவ அரசு முயல்கிறது, அனல்மின் நிலையம், அணுமின் நிலைய கழிவுகள் கடலுக்குள் கலக்கப்படுகிறது. கடலை உல்லாச சொகுசு கப்பல்கள் நிரப்ப உள்ளது ஒருபக்கம் அரசின் திட்டங்களால் கடல் மாசு அடைந்து வருகிறது. இதனால் கடலுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
எனவே கடலையும், கடல் வாழ் மீன்கள் மற்றும் பல்வேறு உயிரினங்களையும் பாதுகாக்கவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு 'ஸு அவுட்ரீச்' அமைப்பு, தெற்காசிய மீனவர் தோழமை அமைப்புடன் இணைந்து சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் மற்றும் கொச்சியில் உள்ள பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் டெக் கேம்ப் மூலம் ஆரோக்கியமான கடல் மற்றும் மீன்கள் மற்றும் மீனவர்களின் தேவை என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று (ஜூலை 12) தொடங்கிய இந்தப் பயிலரங்கத்தில் கடலோர அமைதி மட்டும் வளர்ச்சி இயக்குநர் அருட்தந்தை டங்ஸ்டன் அவர்கள் தலைமை தாங்கினார். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் முன்னிலையில் 'ஸு அவுட்ரீச்' அமைப்பின் செயல் இயக்குநர் டாக்டர் சஞ்சய் மோளூர் மற்றும் பொதுக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.