கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் அருகே உள்ள சந்தோஷ்நகர் பகுதியில் சென்னையில் இருந்து வந்த ஒரு நபருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சந்தோஷ்நகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.
சந்தோஷ்நகர் பகுதியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் வீடு திரும்பினர். இவர்கள் வசித்து வந்த பகுதியான சுங்கான்கடை, விரிகோடு உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டது.
ஆனால் சந்தோஷ்நகர் பகுதியில் உள்ள தடுப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்களை தனிமைப்படுத்துதலில் இருந்து நீக்க வேண்டும் என்று அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அலுவலர்கள் இதுகுறித்து சட்டை செய்யவில்லையென தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தடுப்பை நீக்கக்கோரி இன்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அலுவலர்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை எனவே தொடர்ந்து தனிமைப்படுத்துதலில் இருக்க முடியாது என அவர்கள் கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் அப்பகுதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது திடீரென இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் காவலர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.