சென்னை:வடகிழக்குப் பருவமழை, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத் தமிழ்நாட்டில் பரவலாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது கடந்த சில நாள்களாகவே மழை பெய்துவருகிறது.
நேற்று முந்தினம் மாலையில் தொடங்கிய மழை நேற்று இரவு வரை நீடித்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம், "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். மாவட்டத்தில் தற்போது பெய்த மழை இயல்பைவிட 10 மடங்கு அதிகம்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்" எனத் தெரிவித்துள்ளது.