மேலசங்கரன்குழி கிராம சபை கூட்டம்: தமிழக அரசின் ஆணையை எதிர்த்து கண்டன தீர்மானம்! கன்னியாகுமரி:வரிகள் மூலம் கிராம ஊராட்சிக்கு கிடைக்கும் சொந்த வருவாய் தொகையை, வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு விதித்துள்ள தடை பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிரானது எனவும், தலைவர்களுக்கு உள்ள அதிகாரங்களை தமிழக அரசு பறித்து வருவதைக் கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் மேலசங்கரன்குழி முதல் நிலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், நாகர்கோவில் அடுத்து உள்ள மேலசங்கரன்குழி முதல் நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் முத்து சரவணன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன்படி, “கிராம ஊராட்சியில் வசூல் செய்யப்படுகின்ற வீட்டு வரி கட்டணங்கள் மற்றும் பல்வேறு நேரடி வருமானங்கள் கிராம ஊராட்சியின் சொந்த நிதிக் கணக்கில் இருந்து வருகிறது. ஊராட்சியினுடைய இந்த சொந்த நிதியை இப்பகுதியில் அடிப்படை சாலை செப்பனிடுதல், கழிவு நீர் ஓடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதையும் படிங்க: 6வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்.. எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிப்பதாக அறிவிப்பு!
ஆனால், திடீரென தற்போது தமிழக அரசு ஊராட்சியின் இந்த சொந்த நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என தடை ஆணை விதித்துள்ளது. இது பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் செயல் என கிராம சபை கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று மத்திய அரசு வழங்கக்கூடிய 15வது நிதி மானியக்குழு தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராம ஊராட்சிகளுக்கு வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. இதனால் வளர்ச்சித் திட்ட பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள 95 கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசு வழங்கிய 55 கோடி ரூபாய் நிதி தமிழக அரசிடம் நிலுவையில் இருந்து வருகிறது. இதனை வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோன்று பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, கிராம ஊராட்சி தலைவர்களுக்கான அதிகாரங்களை மெல்ல மெல்ல தமிழக அரசு பறித்து வருகிறது. ஆகையால் அதனை கண்டிப்பதாகவும், அரசு அதிகாரிகள் முன்னிலையில தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கிராமசபை கூட்டத்தில் இராஜாக்கமங்கலம் ஒன்றிய கிராமப்புற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசு அதிகாரிகள், மின்சாரத்துறை அதிகாரிகள் என பல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலசங்கரன்குழி, கீழசங்கரன்குழி, பாம்பன்விளை, எறும்புகாடு உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெசவுத் தொழிலாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை - கிராம சபை கூட்டத்தில் புகார்!