கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. இவர் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் இவர் மீது புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, இவர் மீது அடுக்கடுக்காக ஆறு பேர் புகார்கள் அளித்தனர். இதையடுத்து, காசி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
காசியின் வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் காசியுடன் தொடர்பு வைத்திருந்த இரண்டு நண்பர்களை கைது செய்தனர்.
மேலும் காசியின் லேப்டாப், மெமரி கார்டு, செல்போன் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தப் பொருள்களை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ததில் இதில் இருந்த ஏராளமான ஆவணங்கள் அழிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் காசியை காப்பாற்றும் நோக்கில் ஆவணங்களை அழித்ததாகக் கூறி காசியின் தந்தை தங்க பாண்டியனை கைது செய்தனர்.
இந்நிலையில், காசியின் வீட்டிற்குச் சென்ற சிபிசிஐடி காவல் துறையினர் அவரது தாய் பத்மாவதியை தாக்கியதாகவும் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து காசியின் தாயார் பத்மாவதி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காசியின் சகோதரி அன்னசுதா கூறியதாவது,
"எனது தந்தைக்கு காரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தன. அதனால் அவரை தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். ஆனாலும் காவல் துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுவிட்டனர்.