கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் அருகே மருங்கூர் பகுதியில் உள்ள தோப்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு அனீஸ் (15) என்ற மகன் உள்ளார். அனீஸ் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் தற்பொழுது ராஜாவூரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அனீஸ் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த நிலையில் திடீரென வாந்தி எடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டதால், தாயார் ராஜேஸ்வரி மகனை மருங்கூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தாயார் ராஜேஷ்வரி மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்து விட்டு, வங்கி புத்தகத்தில் ஆதார் கார்டு இணைப்பது தொடர்பாக மருங்கூரில் உள்ள வங்கிக்குச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்த பொழுது அனீஸ் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக மகனை மருங்கூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது, மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அனீஸ் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, உறவினர்கள் அனீஸின் உடலை முதலில் சிகிச்சை அளித்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தவறான சிகிச்சையால் மாணவன் இறந்ததாக கூறி போராட்டம் நடத்தி உள்ளனர்.