கன்னியாகுமரி: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் 'என் மண்.. என் மக்கள்' என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலை முதலில் தனது நடை பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் தொடங்கினார். அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்திற்கு வந்து, பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.
சுமார் 6 மாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 225 ஊர்களில் உள்ள பொதுமக்களை சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு, இறுதியில் சென்னையில் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி பாதயாத்திரையை நிறைவு செய்கிறார் அண்ணாமலை.
இந்நிலையில் தனது நடைப்பயணத்தை தொடர அண்ணாமலை இன்று (14 ஆம் தேதி) இரவு கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். இம்மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், 3 நாட்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். மேலும், நாளை (ஆக.15) காலை 8 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களியக்காவிளை பகுதியில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கும் அவர், அன்று மதியம் குழித்துறை பகுதியில் சிறப்புரை ஆற்றுகிறார்.
பின்னர் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெட்டுமணி பகுதியில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கும் அண்ணாமலை, எறுதூர்கடை பகுதியில் சிறப்புரை ஆற்றுகிறார். அதைத் தொடர்ந்து, 16 ஆம் தேதி ஓய்வு என அறிவிக்கப்பட்டு உள்ளது. மறுநாள் 17 ஆம் தேதி காலை பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட சாமியார்மடம் பகுதியில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு, மணலி சந்திப்பு பகுதியில் சிறப்புரை ஆற்றுகிறார்.
மீண்டும் மாலை 4 மணிக்கு குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தக்கலை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை, வில்லுகுறி பகுதியில் சிறப்புரை நிகழ்த்துகிறார். பின் 18 ஆம் தேதி காலை நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பார்வதிபுரம் பகுதியில் இருந்து தனது நடைப்பயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். பின்பு டெரிக் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு வழியாக வேப்பமூடு காமராஜர் சிலைக்கு வந்து சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.