அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை செயற்குழுக் கூட்டம் குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனத் தலைவரும் வழக்கறிஞருமான பால ஜனாதிபதி தலைமை வகித்தார். அதில் தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 10, 11,12ஆம் வகுப்பு பாடப் புத்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அதன் நிறுவனத் தலைவர் பால ஜனாதிபதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், 'தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள 10, 11 ,12 ஆகிய வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் அய்யா வைகுண்டர் குறித்த பாடம் ஒன்று உள்ளது. அதில் உள்ள அய்யா வைகுண்டரின் வரலாறு முழுவதுமாக தவறாகச் சித்திரிக்கப்பட்டு உள்ளது. மேலும் அய்யா வைகுண்டர் என்று ஒரு படத்தை வைத்து வெளியிடப்பட்டிருக்கிறது.
அது அய்யா வைகுண்டரின் உருவப்படமே கிடையாது. அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது என்ற நிலையில், அய்யா வைகுண்டருக்கு என்கிற ஒரு படம் இதுவரை அய்யா வழியினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவன தலைவர் பால ஜனாதிபதி செய்தியாளர்கள் சந்திப்பு ஒரு போலி படத்தை அய்யாவின் புகைப்படம் என்று போட்டிருக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் அவர் விவிலியத்தைப் படித்து கிறிஸ்தவ இறையியலில் சிறந்து விளங்கினார் என்று கூறுவர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது விஷமத்தனமானது. அய்யா வைகுண்டர் குறித்த இந்தத் தவறான தகவல்களை உடனடியாக நீக்கிவிட்டு, இந்த வருடம் அவரது வரலாறு குறித்து ஆய்வு செய்த பின், அடுத்தாண்டு புத்தகத்தில் அதனைச் சரியாக வெளியிட வேண்டும்.
அப்படி நீக்காத பட்சத்தில் அய்யாவழியினர் அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, தவறான தகவல்களை அளித்தவர்கள் மீது சட்டப்படியான குற்ற நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படும்’ எனக் கூறினார்.