கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கணவர் இறந்து விட்டதால் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய அவர் தனது மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். தான் நடத்தி வரும் மசாஜ் சென்டருக்கு நடந்து செல்வதை அவர் வழக்கமாக கொண்டு உள்ளார்.
இந்நிலையில் மேல்புறம் வழியாக மசாஜ் சென்டருக்கு செல்லும் அந்த பெண்ணை அதே பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தினசரி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனிமையில் இருக்கும் பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என ஓட்டுநர்கள் அழைத்ததாக சொல்லப்படுகிறது.
இதுபோன்ற தொடர் தொந்தரவுகளால் தற்காப்புகாக தன் பையில் மிளகாய் பொடி, சிறிய கத்தி உள்ளிட்ட தற்காப்பு பொருட்களை அந்த பெண் வைத்து உள்ளார். இந்த சம்பவம் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பெண்ணிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன் கைவசம் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து ஆட்டோ டிரைவர்கள் மீது எறிந்து தன்னை காப்பாற்ற முயன்று உள்ளார். உடனே அங்கு நின்று இருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் சிலர் அவரை பலவந்தமாக பிடித்து துணியால் கை கால்களை கட்டியும், அருகில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.