கன்னியாகுமரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பல்வேறு கட்சி பணிகளில் பங்கேற்பதற்காக இன்று(ஜன. 18) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய தலைவர்களில் மிக முக்கியமான தலைவர் தோழர் ஜீவானந்தம். பூதப்பாண்டியில் அவருடைய மார்பளவு சிலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த சிலைக்கு கூண்டு அமைத்து அதற்குள் சிலையை வைக்க வேண்டும் என்று சில வாரங்களாக காவல் துறையின் மூலமாக அழுத்தம் வருகிறது. அவர் ஒரு சார்பு நிலை தலைவர் அல்ல. தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அவரை கூண்டுக்குள் அடைத்து அசிங்கப்படுத்த கூடாது.
டெல்லியில் விவசயிகள் 45 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராடிய விவசாயிகள், வருகிற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளன்று டிராக்டர் பேரணி நாடு முழுவதும் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். அந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தக்கூடிய முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. இந்த முயற்சி அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்திலும் அந்த போராட்டம் நடைபெறும். அந்த போராட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதுடன் அந்த போராட்டத்தில் நேரடியாக பங்கேற்கவும் செய்யும்.
அண்மையில் பெய்த மழையின் காரணமாக டெல்டா மாவட்ட மட்டுமல்ல திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், விழுப்புரம் போன்ற தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்புகளை கணக்கிட்டு முழுமையாக ஹெக்டேர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்குவது மட்டுமல்ல விவசாயிகள் பெற்றிருக்கிற கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்.
வடகிழக்கு பருவமழை பெய்து ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வேண்டும். மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டை புறக்கணிக்காமல், தமிழ்நாடு அரசாங்கம் கோரும் நிதியை முழுமையாக வழங்க வேண்டும். மாநில அரசு அதை வலியுறுத்தி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், மாநில அரசாங்கமே தமிழ்நாட்டில் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் ரீதியாக மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறது. மாநிலத் துணை செயலாளர் திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் தயாரிப்பு குழு அந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. அவை விரைவில் வெளியிடப்படும்.
துக்ளக் பத்திரிகை பொறுப்பாளர் ஆடிட்டர் குருமூர்த்தி சோவின் மறைவிற்குப் பிறகு அப்பத்திரிகையை பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அவர் பத்திரிகை மட்டும் நடத்தவில்லை. அவர் சிவபெருமான் கழுத்தில் இருக்கும் பாம்பு. நீதிபதிகளை விமர்சிப்பார், சசிகலாவை சாக்கடை என்பார், தமிழ்நாடு அமைச்சர்கள் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார். இதுவரை முதலமைச்சரும், அமைச்சர்களும் அதை மறுக்கவும் இல்லை கண்டிக்கவும் இல்லை. ஆகவே அந்த கூட்டுக் கொள்ளை உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றார்.