கன்னியாகுமரி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், சின்னகானல், வட்டகானல் வனப்பகுதியில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதுவரை 8 பேர் இந்த யானை தாக்கி இறந்துள்ளனர். ரேஷன் கடைகளை தாக்கி அரிசியை விருப்ப உணவாக உண்டதால், இந்த யானையை கேரளாவில் அரிக் கொம்பன் என்றும், தமிழ்நாட்டில் அரிசி கொம்பன் என்றும் பெயரிட்டு அழைத்தனர்.
இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்யத் தொடங்கிய அரிசி கொம்பன் யானை தமிழக - கேரள எல்லை பகுதியான பெரியார் புலிகள் காப்பகம் முல்லைக் கொடி பகுதியில் கொண்டு விடப்பட்டது. அரிசி கொம்பன் அங்கிருந்து காடுகள் வழியாக சுற்றித் திரிந்து, கம்பம் நகருக்குள் புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட்டது.
ஒரு வார காலப் போராட்டத்திற்குப் பின்னர் வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்னர் அரிசி கொம்பன் யானை குமரி- நெல்லை எல்லையில் உள்ள அப்பர் கோதையாரின் அருகே உள்ள முத்துக்குழி வயல் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விடப்பட்டது.
வனப்பகுதியில் உள்ள யானையின் கழுத்தில் ரேடியோ காலர் என்னும் எலக்ட்ரானிக் கருவி பொருத்தப்பட்டதால் காடுகளில் யானையின் இருப்பிடம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது யானை கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு மேலே உள்ள குற்றியாறு அணைப் பகுதியில் வாழ்ந்து வருகிறது. இந்த வனப்பகுதியை பொறுத்தவரை தாராளமாக தண்ணீர் வசதியும், உணவும் கிடைப்பதோடு இங்குள்ள வன சூழ்நிலை அரிசி கொம்பன் யானை கடந்த 15 நாட்களாக சுமார் 6 கி.மீ., சுற்றளவில் மட்டுமே சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றி திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது சமூக ஆர்வலர்கள், யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள், ”அரிசி கொம்பன் யானை மூணாறு பகுதியில் பிறந்தது. அதன் பிறகு தேனி பகுதியில் இருந்து தற்போது அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளது.
அப்பர் கோதை ஆறு பகுதியில் யானைக்குத் தேவையான தண்ணீர், உணவு வகைகள் கிடைத்து வருகின்றன. தினமும் யானையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், தினமும் யானை சாப்பிடும் உணவுகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் யானையின் சாணத்தை எடுத்து மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
யானை ஏற்கனவே இருந்த சீதோஷண நிலையில் இருந்து தற்போது புதிய சீதோஷண நிலைக்கு வந்துள்ளதால் அதன் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அதனை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர்.