கன்னியாகுமரி:சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான விஜய்வசந்த் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "டெல்லியில் குளிரில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு இழிவுப்படுத்துகிறது. விவசாயிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டியவைகளை செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகளை மத்திய அரசு நடுரோட்டில் விட்டுள்ளது.
இந்த செயலை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதனால் மேலும் போராட்டம் தீவிரம் அடையும். விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது. வேளாண் மசோதாக்களை அமல்படுத்தும் முன்பே விவசாயிகள் சாலைக்கு வந்துவிட்டனர். அப்படியானால் இந்த சட்டங்களை அமல்படுத்தினால் விவசாயிகள் நிலைமை என்னவாகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.